ஓமைக்ரான் வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் இந்தத் தொற்று பாதிப்பைக் கண்டறிய உதவி செய்த பெண் மருத்துவர், இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தான் கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏஞ்சலிக் கோட்ஸீ என்ற மருத்துவர் தென் ஆப்பிரிக்க மருத்துவக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ‘ஓமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தான் கணிப்பதாகத் ஏஞ்சலிக் கோட்ஸீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
ப்ரிடோரியா மருத்துவமனையில் சில வாரங்களாக கரோனா தொற்றாளர்களே இல்லாமலேயே இருந்தது. கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சில அறிகுறிகளுடன் அனுமதியாகினர். ஆனால் அவர்களைப் பரிசோதித்த போது அவர்களுக்கு இருந்த அறிகுறிகள் டெல்டா வேரியன்ட் ஏற்படுத்தும் அறிகுறிகளைப் போல் இல்லை.
சிலருக்கு தொண்ட கரகரப்பு, சிலருக்கு கடுமையான அயர்ச்சி, சிலருக்கு தசை வலி என்று வித்தியாசமான பாதிப்புகள் இருந்தன. அதனால் நான் இது டெல்டா வைரஸாக இருக்க முடியாது, பீட்டா அல்லது புதிய வேரியன்ட்டாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுத்தேன்.
அதன்படி ஜீனோம் சீக்வென்ஸிங் (மரபணு வரிசைப்படுத்துதல்) செய்தபோது அது கரோனா வைரஸின் புதிய உருவம் என்று தெரியவந்தது.
ஆனால், என்னைப் பொருத்தவரை ஓமைக்ரான் வைரஸ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும் என கணிக்கிறேன்.
இந்த வைரஸ் ஏற்கெனவே ஐரோப்பாவில் பரவி இருக்கலாம். ஆனால் அவர்கள் ஜீனோம் சீக்வென்ஸிங் செய்யத் தவறி இருக்கலாம். நாங்கள் இதை முறையே செய்து உலகுக்குச் சொன்னதால் இது தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.