பிரவீன் சின்கா 
உலகம்

‘இன்டர்போல்’ நிர்வாக குழுவுக்கு சிபிஐ சிறப்பு இயக்குநர் தேர்வு

செய்திப்பிரிவு

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வேதேச போலீஸ் அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்கா தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டர்போல்’ சர்வதேச அளவில் தீவிரவாதம், போதை கடத்தல், இணையதள குற்றங்களுக்கு எதிராக செயல்படுகிறது. ‘இன்டர்போல்’ அமைப்பின் 89-வது பொதுச்சபை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்து வருகிறது.

‘இன்டர்போல்’ அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு ஆசியாவில் இருந்து தேர்ந் தெடுக்கப்படும் 2 உறுப்பினர்கள் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இந்தியா, சிங்கப்பூர், சீனா, கொரியா, ஜோர்டான் நாடுகளிடையே போட்டி நிலவி யது. இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சிபிஐ சிறப்பு இயக்குநர் பிரவீன் சின்கா நிர்வாக குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிரவீன் சின்காவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்தன. இதற்காக பல்வேறு நாடுகளின் தூதரகங்களை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டினர். உலக அளவில் ஒருங்கிணைந்த இந்தியாவின் தீவிர பிரச்சாரத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதாக வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சின்கா தற்போது சிபிஐ சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறார். பிரவீன் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் சர்வதேச அளவிலான குற்றங்களைத் தடுக்கும் ‘இன்டர்போல்’ அமைப்பின் முயற்சியில் இந்தியா மேலும் தீவிர பங்காற்றும் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT