சிங்கப்பூர் மருத்துவமனைகளில் செவிலியருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்று செவிலியர் பணியமர்த்த உதவுபவர்களுக்கு ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
தேர்ந்த செவிலியர் ஒருவரை குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துவிட்டால், சேர்த்துவிடும் நபருக்கு 12,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நிலவும் செவிலியர் தட்டுப்பாடு குறித்து தனியார் மருத்துவமனையில் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "வெளிநாடுகளில் இருந்து நிறைய செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிவது வழக்கம். ஆனால், சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்த குடியுரிமை வழங்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் இங்கு ஒன்றிரண்டாண்டுகள் வேலை செய்துவிட்டு அந்த பணி அனுபவத்தைக் கொண்டு கனடா போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர்" என்றார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவுக்கு செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது அது இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டுமே 1500 செவிலியர் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் வெளிநாட்டைச் சேர்ந்த 500 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆண்டுக்கு 2000 செவிலியர் ராஜினாமா என்பது இந்த ஆண்டில் 6 மாதங்களிலேயே 1500 கடந்துவிட்டதால் சுகாதாரத் துறை கவலையில் ஆழ்ந்துள்ளது.
சிங்கப்பூரில் இன்னும் கரோனா தொற்று குறையாத காரணத்தால் அங்கு செவிலியர், மருத்துவர்கள் தேவை அதிகமாகவே உள்ளது.