உலகம்

மேற்கு பல்கேரியாவில் பேருந்து தீப்பற்றிய விபத்தில்12 குழந்தை உட்பட 45 பேர் உயிரிழப்பு: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

மேற்கு பல்கேரியாவில்பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 12 குழந்தைகள்உட்பட 45 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு பல்கேரியாவில், தலைநகர் சோஃபியாவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு ஸ்ட்ரூமா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் வடக்கு மாசிடோனிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் சிக்கிக் கொண்ட 12 குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எரியும் பேருந்தில் இருந்து வெளியே குதித்த 7 பயணிகள் சோஃபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்கேரிய அதிகாரிகள் கூறும்போது, “விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.என்றாலும் பேருந்து தீப்பிடிப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நெடுஞ்சாலை தடுப்பில் மோதியதாகத் தெரிகிறது” என்றனர்.

விசாரணை

பல்கேரிய புலனாய்வு அமைப்பின் தலைவர் போரிஸ்லாவ் சரபோவ் கூறும்போது, “வடக்குமாசிடோனிய சுற்றுலா நிறுவனத்தின் 4 பேருந்துகள் துருக்கியில் இருந்து திங்கட்கிழமை இரவு பல்கேரியாவுக்குள் நுழைந்தன. அவற்றில் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

ஓட்டுநரின் தவறு அல்லது தொழில்நுட்பக் கோளாறு இதற்கு கராணமாக இருக்கலாம் என கருதுகிறோம். என்றாலும் இதுகுறித்து விசாரித்து வரு கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT