அமெரிக்க பங்குச்சந்தை மோசடி விவகாரத்தில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரஜத் குப்தா (67) விடுதலை செய்யப்பட்டார்.
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் மெக்கின்ஸி நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரராகவும் இருந்த ரஜத் குப்தா அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதன்பேரில் 2012-ல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு அக்டோபரில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது 2 ஆண்டுகள் சிறைக்காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்ச் 11-ம் தேதியே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்க பங்குச் சந்தையில் ரஜத் குப்தா மீண்டும் கால்பதிப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஜத் குப்தாவின் நண்பர் ராஜரத்தினம் தற்போது 11 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.