உலகம்

போகோஹாரம் தீவிரவாத அமைப்பு மீது ஐ.நா. பொருளாதாரத் தடை: நிதியுதவி செய்தால் கடும் நடவடிக்கை

செய்திப்பிரிவு

நைஜீரியாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான போகோ ஹாரம் மீது ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

போகோஹாரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் முகமது ஷெகாவ் மற்றும் அதிலிருந்து பிரிந்து உருவான அன்சாரு தீவிர வாத அமைப்பு ஆகியவற்றின் மீது பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

அதன்படி போகோஹாரம், அன்சாரு அமைப்புகளுக்கு நிதியுதவி, பொருளாதார உதவி செய்யும் தனிநபர்கள், அமைப்புகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்-காய்தாவுடன் தொடர்பு

அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் போகோஹாரம் அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இரு அமைப்புகளும் அவ்வப்போது கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2002-ல் தொடங்கப்பட்ட இந்த தீவிரவாத அமைப்பு நைஜீரியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நாசவேலைகளில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டுள்ளனர்.

மாணவிகள் கடத்தல்

தேவாலயங்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்களை குறிவைத்து தாக்கி வரும் போகோஹாரம் தீவிரவாதிகள் அண்மையில் 200 பள்ளி மாணவி களை கடத்திச் சென்றனர். அந்த மாணவிகளை மீட்க நைஜீரியா அரசும் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு படைகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை.

ஐ.நா. சபை சார்பில் போகோ ஹாரம் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் அதன் செயல்பாடுகள் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT