உக்ரைன் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர். விமான தாக்குதலில் 49 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் மதிப்புமிக்க ராணுவ தளவாடங்கள் முற்றிலும் எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எல்லைப் பகுதியான லுகன்ஸ்க் என்ற இடத்தில் இன்று அதிகாலை 40 படை வீரர்களையும், ஒன்பது ஊழியர்களும் கொண்ட உக்ரைனின் ராணுவ விமானமான 'இல்யூஷின்-76' கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் பயணித்த வீரர்கள் 49 பேரும் இறந்து விட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் செய்தித் தொடர்பாளரான விளாடிஸ்லாவ் செலிஸ்நியோவ் செய்தி வெளியிட்டுள்ளார்.
ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் கனரக இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தி தகர்த்துள்ளனர். இதில் விமானம் முற்றிலும் பொசுங்கியதாக நோட்டோ காவல்படை, அதன் படத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக உக்ரைனில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது. கிளச்சியாளர்கள் வசமிருந்த மரியூபோல் நகரை, நேற்று அரசுப் படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி தனது வசம் கொண்டது. இதில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நாளே, ராணுவத்தின்மீது இந்த எதிர்மறை தாக்குதல் நடந்தேறியுள்ளது. 'இல்யூஷின்-76' போர் கப்பல் போரின் உச்சக்கட்ட நேரத்தில் ராட்சத ராணுவ தளவாடங்கள் மற்றும் பொது மக்களை ஏற்றி செல்லக்கூடியது.
கடந்த இரண்டு மாதங்களாக அங்கு நடந்து வரும் சண்டையில் பல தாக்குதல்கள் நடந்திருந்தாலும், இந்த தாக்குதல் ராணுவத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறப்படுகின்றது.
பொது மக்கள் பெரிய அளவில் வசிக்கும் லுகான்ஸ்க் நகரில் இன்று காலை முதலே தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.