உலகம்

கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பஹ்ரைன் அனுமதி 

செய்திப்பிரிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பஹ்ரைன் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசி உருவாக்கின. இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்தது.

இதில் அஸ்ட்ரா ஜென்கா நிறுவனம் தயாரி்த்த கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளி்த்து. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் தாமதித்தது.

கடந்த 3ம் தேதி அவசரகாலப் பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார் அமைப்பு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல நாடுகளில் தூதரகங்கள் வாயிலாக பேச்சு நடத்தியது.

இதன் பிறகு இந்தியர்களை எந்தவிதமான தடையின்றி அனுமதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. தற்போதைய நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு 10-க்கும் மேற்பட்ட நாடுகள் அனுமதியளித்தன.

இந்தநிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பஹ்ரைன் அனுமதி வழங்கியுள்ளது.

பஹ்ரைனின் தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் அவசரகால பயன்பாட்டை அங்கீகரித்துள்ளதாக பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT