உலகம்

காந்தியின் கொள்கையை கற்றறிய இந்தியா வந்த மார்ட்டின் லூதர் கிங்: அமெரிக்க ஜனநாயக கட்சித் தலைவர் நான்சி பேச்சு

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக கொள்கைகளை கற்பதற்காக மார்ட்டின் லூதர் கிங் தனது மனைவி கோரிடா ஸ்கூட் கிங்குடன் 1959-ல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்று அமெரிக்க பிரிதிநிதிகள் அவையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பெலோசி பேசியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மக்கள் உரிமை சட்டம் நிறைவேற் றப்பட பாடுபட்டதற்காக மிக உயரிய அமெரிக்க காங்கிர ஸின் தங்க பதக்கம் மார்ட்டின் லூதர் கிங் தம்பதிக்கு அவர் களின் மரணத்துக்கு பிறகு அறிவிக் கப்பட்டது.

இதனை வரவேற்று பிரதிநிதி கள் அவையில் வரவேற்று நான்சி பெலோசி பேசியது: சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கடுமையான முயற்சிகளுக்குப் பின் மக்கள் உரிமைச் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கும் அவரது மனைவியும் இந்தியா சென்று காந்தியடிகளின் சத்தியாகிரக கொள்கையை பயின்று வந்தனர். இதன் மூலம்தான் அமெரிக்காவில் அவர்களால் மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்த முடிந்தது.

சத்தியாகிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு உண்மை மற்றும் அகிம்சை மீதான பிடிப்பு என்று அர்த்தம் கூறலாம்.

சிவில் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 ஆண்டுகளுக்குப் பின் நாம் இங்கே கூடியிருக்கிறோம். சட்டம் என்பது நீதி, நியாயம், சமதர்மம் ஆகியவற்றைக் காக்கும் தூணாக உயர்ந்து நிற்கிறது. அமெரிக்கர்களை மேலும் ஒரு படி உயர்ந்த நிலைக்கு மக்கள் உரிமைகள் சட்டம் எடுத்துச் சென்றது என்பதில் சந்தேகமில்லை.

இதற்காக மார்ட்டின் லூதர் கிங் தம்பதி நடத்திய போராட்டத்தையும், செய்த தியாகங்களையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று நான்சி பேசினார்.

செனட் அவையின் குடியரசுக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் பேசுகையில், “எனக்கு ஒரு கனவு உண்டு” என்ற புகழ்பெற்ற உரையை மார்ட்டின் லூதர் கிங் ஆற்றியபோது நான் வாஷிங்டனில் மாணவனாக இருந்தேன். மாணவர்களாகிய நாங்கள் அவரது வார்த்தைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டோம்.

அமெரிக்காவில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்கள் இருந்தாலும் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர் பேசிய விதத்தை மறக்க முடியாது. மக்கள் உரிமைச் சட்டத்துக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார்’’ என்று ஹாரி ரீட் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT