பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.
ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய் சரிந்தது. பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோர்க்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பணம் திரட்டவும் புதிய திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
இந்தநிலையில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இதனால் நிலக்கரி, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றன.
பாகிஸ்தானில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அந்நாட்டில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் லிட்டருக்கு ரூ.8.03 உயர்த்தப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.145.82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது நவம்பர் 5 -ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பிரச்சினைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது கூடுதல் பொருளாதார நெருக்கடியை நோக்கி செல்கிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (நேப்ரா) மின்சார விலையை யூனிட்டுக்கு ரூ.1.68 உயர்த்தியுள்ளது. இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.