உலகம்

இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் நம்பகமான விசாரணை உறுதி செய்யப்படும்: ஐ.நா.

பிடிஐ

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமை மீறப்பட்டது தொடர்பான புகார் மீது நம்பகமான விசாரணை நடைபெறுவது உறுதி செய்யப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித உரிமை மீறலில் அந்நாட்டு அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் பங்கு இருப்பதாக ஐ.நா.மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தில் (2014) குற்றம்சாட்டப்பட்டது. அத்துடன் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய குழு, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் புகார் தொடர்பான உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா.பொதுச் செயலாளரின் துணை செய்தித்தொடர்பாளர் பர்ஹன் ஹக் நியூயார்க்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சிறிசேனாவில் கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும்போது, “இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஐ.நா.மனித உரிமை கவுன்சில் மதிப்பீடு செய்யும். இந்த விவகாரத்தில் நம்பகமான விசாரணை நடைபெறுவதை ஐ.நா. உறுதி செய்யும்” என்றார்.

SCROLL FOR NEXT