கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள கோவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது.
இதனால், இனி இந்தத் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தடையின்றி தனிமைப்படுத்துதல் கெடுபிடி இன்றி வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.
கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது. இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்தன.
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், கோவாக்சினுக்கு மட்டும் அந்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எப்.டி.ஏ அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை தர மறுத்ததே இதற்குக் காரணம். கூடுதல் தரவுகளை அனுப்புமாறும் அது கூறிவிட்டது.
இதனால் உலகம் முழுவதுமே கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு சிக்கல் நிலவியது. குறிப்பாக இந்திய மாணவர்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக 77.8% திறன் வாய்ந்தது. டெல்டா திரிபுக்கு எதிராக 65.2% பாதுகாப்பு அளிக்கிறது.