உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 40,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவில் அக்டோபர் மாதம் முதலே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு சமீபநாட்களாக ரஷ்யாவில் கரோனா தொற்று வீரியம் அடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 40,993 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரு நாட்களாக தினசரியாக ரஷ்யாவில் கரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அக்டோபர் 30 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் பள்ளிகள், உணவு விடுதிகள், ஜிம் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.

ரஷ்யாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசியை இலவசமாகவே அரசாங்கம் வழங்கி வந்தாலும் கூட இதுவரை ரஷ்ய மக்கள் தொகையில் மொத்தம் 32.5% பேர் மட்டுமே இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

உலக அளவில் கடந்த 3 மாதங்களில் கரோனா தொற்று குறைந்திருந்தாலும், தற்போது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT