பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை பள்ளி பாடதிட்டங்களில் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ரோமில் இருந்துபிரதமர் மோடி பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான 26-வதுஉச்சி மாநாடு நேற்று தொடங்கியது. 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்று பேசுகின்றனர்.
இம் மாநாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதைத் தடுக்க பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை தடுக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பாரிஸ் உடன்படிக்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் உள்ளிட்டோர் பேசினர்.
இதில் பிரதமர் மோடி பேசும்போது, “நம்முடைய வளர்ச்சி திட்டங்களை மாறிவரும் சூழலுக்கு ஏற்றபடி அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர்,தூய்மை இந்தியா, சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப உள்ளதுடன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி உள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை பள்ளி பாடதிட்டங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையினருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படும்” என்றார்.
இம் மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்த மாநாட்டில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.