பிரிட்டன் இந்த வருடம் இறுதிக்குள் 2 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை வளரும் நாடுகளுக்கு அனுப்ப இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, “ சுமார் 2 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை இந்த வருடம் இறுதிக்குள் பிற நாடுகளுக்கு வழங்க இருக்கிறோம். பிரிட்டன் முன்னரே 10 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை ஏழை நாடுகளுக்கு வழங்கி உள்ளது.
கரோனாவினால் இழந்த பொருளாதாரம் மீண்டு வருகிறது. கரோனாவினால் உண்டான பொருளாதார இழப்பை சரி செய்யும் நடவடிக்கைகளில் உலக நாடுகளின் தலைவர்கள் தயாராக வேண்டும்.
உலகின் முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு கரோனா முழுமையாக ஒழித்தாலே தீர்வு” என்று தெரிவித்தார்.
ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளை உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
சமூக இடைவெளியும், தடுப்பூசியுமே கரோனா பரவலைத் தடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.