ஒசாமா பின்லேடன் வேட்டையை பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிவிக்காததற்கு ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புதான் காரணம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள “ஹார்டு சாய்சஸ்” என்ற புத்தகத்தில் அல்-காய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டது. எனினும் இந்த உறவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை சுற்றி வளைக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்புவது குறித்து அதிபர் ஒபாமா, பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ், நான் உள்பட உயரதிகாரிகள் சிறப்பு ஆலோசனை நடத்தினோம்.பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பறந்து சம்பவ இடத்தில் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவம்தான் தாக்குதல் நடத்துகிறது என்று அந்த நாடு தவறாகக் கருதக்கூடும்.
இதனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. எனவே முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிப்பது நல்லது என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு இடையேயான உறவிலும் விரிசல் ஏற்படும் என்றும் கூட்டத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு அல்-காய்தா, தலிபான் உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தால் பின்லேடன் வேட்டை திட்டம் பாழாகிவிடும் என்பதால் அந்த நாட்டுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த சீல்ஸ் படைப் பிரிவினர் 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றனர்.