கடும் கரோனா பரவல் காரணமாக சிவப்பு பட்டியலில் வைத்திருந்த 7 நாடுகளை பிரிட்டன் அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “வரும் திங்கள் முதல் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும் வர்த்தக ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் இந்த முடிவு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மாறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரிட்டன் வரும் பயணிகள், தனிமைப்படுத்தலுக்குப் பிறகே அனுமதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
உலக அளவில் கடந்த 3 மாதங்களில் கரோனா குறைந்திருந்தாலும், தற்போது ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.