உலகம்

இனப் படுகொலையில் ஈடுபட்ட ஈரான் அதிபருக்கு எதிராக வழக்கு: அமெரிக்கா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இனப் படுகொலையில் ஈடுபட்ட ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் பேசும்போது, ”நாம் கொடுமையானவர்கள் முன்னால் அமைதியாக இருக்கக் கூடாது. இப்ராஹிம் ரெய்சி எவ்வளவு கொடுமையானவர் என்பதை இங்குள்ளவர்கள் உணர வேண்டும். ஈரானில் 30 ஆயிரம் அரசியல் கைதிகள் தூக்கிலிடுவதற்கு ரெய்சியும் ஒரு காரணம்.

இனப் படுகொலையில் ஈடுபட்ட ரெய்சிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும். ஈரான் அதிபராக இப்ராஹிம் ரெய்சி தேர்ந்தெடுக்கப்பட்டது நிச்சயம் பலவீனமே” என்று தெரிவித்தார்.

மேலும், ஈரானின் அணு ஆயுத சோதனைக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவுகள் சரியானவைதான் என்றும், ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன என்றும் மைக் பென்ஸ் தெரிவித்தார்

இப்ராஹிம் ரெய்சி, ஈரான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்தவர். அவருடைய பதவிக் காலத்தில் ஈரான் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் பலருக்கு ரெய்சி மரண தண்டனை வழங்கினார். இதன் காரணமாக மனித உரிமை அமைப்புகள் ரெய்சியைத் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த நிலையில் ரெய்சி மீது இத்தகைய குற்றச்சாட்டை அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சுமத்தியுள்ளது.

SCROLL FOR NEXT