கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கிய சவூதி அரேபியாவுக்கு பிரதமர் இம்ரான் கான் உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார். கஷ்டமான காலங்களில் எங்களோடு இருக்கும் சவுதி அரேபியாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.
ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்தது.
பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி ஆலை, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சர்வதேச நிதியமான கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
சிக்கன நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா சென்ற இம்ரான் கான் சொகுசு ஓட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் அறையில் தங்கி சிக்கனத்தை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரியாத்தில் நடைபெற்ற மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சி உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்தை சந்தித்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது. பாகிஸ்தானின் மத்திய வங்கிக்கு 1.8 பில்லியன் டாலர் நிதியுதவியும், பெட்ரோலியப் பொருட்களுக்கு 1.2 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.
இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.
‘‘கஷ்டமான காலங்களில் எங்களோடு இருக்கும் சவுதி அரேபியாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , “பாகிஸ்தானின் மத்திய வங்கிக்கு 1.8 பில்லியன் டாலர் நிதியுதவியும், பெட்ரோலியப் பொருட்களுக்கு 1.2 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்ததற்காக இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எங்களின் இக்கட்டான காலகட்டங்களில் அதிகரித்து வரும் பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்ளவும் எங்களுக்கு உதவியாக இருக்கும். சவுதி அரேபியா எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. கடினமான காலங்களில் எங்களுடன் இருக்கும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நன்றி.
சவூதி தனது சக முஸ்லிம் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்களை வழங்குவதன் மூலம் சவூதி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது.’’ தெரிவித்தார்.