உலக அமைதி மற்றும் சர்வதேச விதிகளை எப்போதும் நிலைநிறுத்துவோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைந்து 50 - வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, “உலக அமைதி மற்றும் சர்வதேச விதிகளை எப்போதும் சீனா நிலைநிறுத்தும்.
சீனா அனைத்து வகையான மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியல், ஒருதலைப்பட்சத்தை எதிர்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், அமைதி, மேம்பாடு, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மதிப்புகளை ஊக்குவிக்குமாறு அனைத்து நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தைவான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.
தேவைப்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். தொடர்ந்து தைவான் சீனாவுடன் இணையும் என்று அவர் தெரிவித்து வந்தார்.
சீனா சமீபத்திய ஆண்டுகளில் தைவானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தைவான் இடையிலான எல்லையைக் கடந்துள்ளன என்றும், அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறி இருந்தார்.
சீனா தைவானை தாக்கினால் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் உலக அமைதியை நிலை நிறுத்துவோம் என்று சீனா கூறியுள்ளது.