கிழக்கு ஐரோப்பாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து 'our world data' வெளியிட்ட தகவலில், “கிழக்கு ஐரோப்பாவில் கரோனா வைரஸ் பரவிய காலம் முதலே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில் மட்டும் 2 கோடிக்கு அதிகமான நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்லனர். இதற்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தினமும் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றில் 20% கிழக்கு ஐரோப்பாவில் பதிவு செய்யப்படுகிறது. இதில், ரஷ்யா, ரோமானியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில், கரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், தங்கள் நிறுவனம் உருவாக்கிய பூஸ்டர் தடுப்பூசி 95.6% பயனளிப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.