உரிய நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் லட்சக்கணக்கான ஆப்கானியர்களும், குழந்தைகளும் உயிரிழக்கக் கூடும் என்று உலக உணவு திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக உணவு திட்ட அமைப்பின் தலைமை இயக்குநர் பிஸ்லே கூறும்போது, “ஆப்கான் மக்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பசியால் குழந்தைகள் இறக்கப் போகிறார்கள். நிலைமை மோசமாகப் போகிறது. நிதி வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கான ஆப்கான் மக்களும், குழந்தைகளும் இறப்பார்கள். லட்சக்கணக்கான மக்கள் 2 மாதங்களில் கடும் பட்டினிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், உலக நாடுகள் இதனை உணரவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ரஷ்யா தலைமையில் இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் கடந்த வாரம் நடந்தது. இதில் மனிதாபிமான உதவிகள் ஆப்கானிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பின்னணி
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஆப்கனில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.