உலகம்

ஆஸ்கர் விருது 2016... பதியத்தக்க 15 தகவல்கள்!

பிடிஐ

ஆஸ்கர் விருதை வென்றார் டி கேப்ரியோ;

‘ஸ்பாட் லைட்’ சிறந்த படம், சிறந்த நடிகை ப்ரீ லார்சன்,

இங்கிலாந்து வாழ் இந்தியருக்கும் விருது

* ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த படமாக ‘ஸ்பாட் லைட்’ தேர்வானது. சிறந்த நடிகர் விருதை ‘தி ரெவனன்ட்’ படத்தில் நடித்த டி கேப்ரியோ பெற்றார். அதிகபட்சமாக பல்வேறு பிரிவுகளில் ‘மேட் மேக்ஸ் ப்யூரி ரோடு’ 6 விருதுகளையும், ‘தி ரெவனன்ட்’ 3 விருதுகளையும், ‘ஸ்பாட் லைட்’ 2 விருதுகளையும் பெற்றன.

* லியனார்டோ டி கேப்ரியோ சிறந்த நடிகருக்கான பட்டியலில் இதற்கு முன்னர் 4 முறை பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போதுதான் அவர் முதல் முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

* இயக்குநர், ஒளிப்பதிவு, நடிகருக்கான விருது என 3 ஆஸ்கர் விருதுகளை ‘தி ரெவனன்ட்’ படம் தட்டிச் சென்றது.

* சிறந்த திரைப்படமாக ‘ஸ்பாட் லைட்’ தேர்வானது. மேலும் அந்த படம் அசல் திரைக்கதைக்கான விருதையும் பெற்றது. இந்த விருதை டாம் மெக்கர்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர் பெற்றனர்.

* ‘ஸ்பாட் லைட்’ படமானது கத்தோலிக்க தேவாலயத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகளை நிருபர் ஒருவர் வெளிக்கொண்டு வருவதை மைய மாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* ‘மேட் மேக்ஸ்: பியூரி ரோடு’ என்ற திரைப்படம் சிறந்த எடிட்டிங், சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஆடை வடிமைப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த தயாரிப்பு வடிமைப்பு என 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.

* சிறந்த இயக்குநருக்கான விருதை இரண்டாவது முறையாக மெக்ஸிகோவை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரோ இனாரிட்டு வென்றார். கடந்த ஆண்டு ‘பேர்டுமேன்’ படத்துக்காக விருது வென்ற அவர் இந்த முறை ‘தி ரெவனன்ட்’ படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

* சிறந்த நடிகர், இயக்குநர் விருதை வென்ற ‘தி ரெவனன்ட்’ படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் பெற்றது. இதனை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இமானுவல் லுபெஸ்கி பெற்றார்.

* சிறந்த நடிகைக்கான விருதை ‘ரூம்’ படத்துக்காக ப்ரீ லார்சன் பெற்றார். சிறந்த துணை நடிகையாக ‘தி டானிஷ் கேர்ள்’ படத்தில் நடித்த அலிசியா விக்காண்டர் தேர்வானார். இதபோல் துணை நடிகருக்கான விருதை மார்க் ரைலான்ஸ் பெற்றார். ‘பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ என்ற படத்தில் அவரது சிறப்பான நடிப்புக்காக இந்த விருது கிடைத்தது.

* சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை ஆடம் மெக்கே மற்றும் சார்லஸ் ரன்டால்ப் ‘தி பிக் ஷார்ட்’ படத்துக்காக பெற்றனர். மைக்கேல் லீவிஸ் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கும். வணிகர்கள் குழு ஒன்று எதிர்வரும் பொருளாதார சரிவை பயன்படுத்தி ஆதாயம் தேடுவதே படத்தின் மைய கருத்தாகும்.

* சிறந்த அயல் நாட்டு திரைப்படமாக ஹங்கேரியின் ‘சன் ஆஃப் சால்’ தேர் வானது. இந்த பிரிவில் விருது வெல்ல கொலம்பியாவின் ‘எம்பரேஸ் ஆஃப் தி செர்பென்ட்’, பிரான்ஸின் ‘முஸ்டங்’, ஜோர் டானின் ‘தீப்’, டென்மார்க்கின் ‘ஏ வார்’ ஆகிய படங்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

* இந்த விழாவில் இந்தியாவில் இருந்து எந்த படமும் தேர்வாகாத நிலையில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அவர் சிறந்த எடிட்டிங் விருது வழங்கும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

* இங்கிலாந்து வாழ் இந்தியரான ஆசிப் கபாடியா, சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை வென்றார். மறைந்த பாடகி ஏமி வைன்ஹவுஸைப் பற்றி அவர் தயாரித்த ‘ஏமி’ என்ற ஆவணப்படம் இந்த விருதை தட்டிச்சென்றது.

* அமெரிக்கா வாழ் இந்தியரான சஞ்சய் படேல் அனிமேஷன் குறும்படத்துக்கான விருது பரிந்துரைப் பட்டியலில் இருந்தார். ஆனால் இந்த விருதை 'பியர் ஸ்டோரி' என்ற படம் வென்றது.

* பாகிஸ்தானின் ஷார்மீன் ஓபேய்ட், சிறந்த குறும்படம் (ஆவணப்பட பிரிவு) - ‘எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்’ என்ற படத்துக்காக பெற்றார். இவர் ஆஸ்கர் விருது பெறுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்னர் ‘சேவிங் ஃபேஸ்’ என்ற குறும்படத்துக்காக வென்றிருந்தார். சிறந்த பாடலாக ஸ்பெக்டர் படத்தின் 'ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால்' என்ற பாடல் தேர்வானது. இந்த பாடலுக்காக ஷேம் ஸ்மித் விருது பெற்றார்.

* சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருது ‘இன்சைட் அவுட்’ படத்துக்கு கிடைத்தது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படமாக ‘ஸ்டட்டரர்’ தேர்வானது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது ‘எக்ஸ் மாகினா’ படத்துக்கு கிடைத்தது.

டி கேப்ரியோ பெருமிதம்

சிறந்த நடிகருக்கான விருது வென்ற டி கேப்ரியோ விழாவில் பேசியதாவது:

ஆஸ்கர் அகாடமிக்கு நன்றி. என்னுடன் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் களுக்கும் எனது வாழ்த்துகள். நம்பமுடியாத நடிப்புத் திறனை அவர்கள் காட்டியிருந்தார்கள். அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலனே 'தி ரெவனன்ட்'.

இந்த இயற்கை உலகுடனான மனிதர் களின் உறவே ‘ரெவனன்ட்’ திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டான 2015-ல் ‘ரெவனன்ட்’ படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது.

எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக் காக, நமது குழந்தைகளின் குழந்தை களுக்காக, அரசியலாலும் பேராசையா லும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார் டி கேப்ரியோ.

SCROLL FOR NEXT