கனடாவில் 5 முதல் 11 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேண்டுகோளை அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பைஸர் நிறுவனம் வைத்துள்ளது.
இதுகுறித்து கனடா சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “5 - 11 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான கோரிக்கையை பைஸர் நிறுவனம் வைத்துள்ளது. கனடாவின் இளம் வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்குக் கோரப்பட்ட முதல் வேண்டுகோள் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி இளம் பருவத்தினர் 2,268 பேருக்கு சோதனையாகச் செலுத்தப்பட்டது. இதில் யாருக்கும் எந்தப் பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும், குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் இந்த கரோனா தடுப்பூசிகள் வழக்கமாகச் செலுத்தப்படும் தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த டோஸ்களைக் கொண்டுள்ளதாகவும் பைஸர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைஸர் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துவிட்டது. 12 - 17 வயதினருக்கு பைஸர் கரோனா தடுப்பூசி செலுத்த தென் ஆப்பிரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது