கரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் (84) நேற்று உயிரிழந்தார்.
அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக் குரியவர் காலின் பாவெல். அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாகவும் பணி புரிந்தவர் ஜெனரல் காலின்பாவெல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அமைச்சரவையில் அவர் இடம்பெற்றி ருந்தார். இவர் 2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை அமைச்சர் பதவி வகித்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். காலின் பாவெலின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாங்கள், ஒரு அன்பான கணவரை, தகப்பனை, தாத்தாவை ஒரு நல்ல அமெரிக்கரை இழந்துவிட்டோம். காலின் பாவெல் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருந்தார். இருப்பினும் அவருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்" என்று தெரிவித்துள்ளனர்.
காலின் பாவெலுக்கு மனைவி அல்மா, மிச்செல், லிண்டா, ஆன் மேரி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.