உலகம்

ஐ.நா. நிபுணர் குழுவில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி

செய்திப்பிரிவு

ஐ.நா. அமைதிப் படையின் நிபுணர் குழுவில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அபிஜித் குஹா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஐ.நா. அமைதிப் படையினர் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படையில் அதிநவீன தொழில்நுட்பங்கள், புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க ஐந்து நபர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை ஐ.நா. அமைத்துள்ளது.

இக் குழுவில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அபிஜித் குஹா இடம்பெற்றுள்ளார். அவர் ஏற்கெனவே ஐ.நா. அமைதிப் படையின் துணை ராணுவ ஆலோசகர், அமைதிப்படை அலுவலக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஹால் லூட் குழுவுக்கு தலைமை ஏற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மைக்கேல் பிரையர், டென்மார்க்கை சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜோன்ஸ் பாகர், கனடாவைச் சேர்ந்த வால்டர் டார்ன் ஆகியோர் குழுவின் இதர உறுப்பினர்கள் ஆவர்.

நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 5 பேரும் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப் படையின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவசாலிகள். இந்தக் குழு இந்த மாத இறுதியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளது. குழுவின் பரிந்துரை அறிக்கை நவம்பரில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT