ஆப்கானிஸ்தானில் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் விரைவில் மாணவிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பை கல்வித் துறை முறைப்படி விரைவில் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜசீரா செய்தி ஊடகத்துக்கு தலிபான் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான சயீது கோஸ்டி அண்மையில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், எனக்குத் தெரிந்தவரையில் விரைவில் பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழங்கள் வரை அனைத்திலும் பெண்கள் அனுமதிக்கப்படுவர். பெண்கள் ஆசிரியப் பணி செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், தலிபான்கள் எங்கள் ஆட்சியில் பெண்ணுரிமை பேணப்படும், பெண் கல்விக்கு தடையிருக்காது எனக் கூறியிருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தலிபான் ஆட்சி அமைந்தவுடனேயே இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. அரசியலில் பெண்களுக்கு இடமில்லை என தலிபான்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் இளம் பெண் மலாலா யூசுப்ஸாயி, உலகிலேயே ஆப்கானிஸ்தான் தான் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. தலிபான்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப செயல்பட வேண்டும். உடனடியாக, பெண் கல்வி தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.