உலகம்

உலகில் கரோனாவுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள்: ஐஎம்எப் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

செய்திப்பிரிவு

கரோனாவுக்குப் பிறகு உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கியின் வளர்ச்சிக் குழு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்பட்ட எந்த ஒரு நடவடிக்கைக்கும் முன்னுதாரணங்கள் எதுவும் இல்லை. இப்படியொரு பெருந்தொற்று நெருக்கடியை முதன்முறையாக எதிர்கொள்கிறோம். இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நிலைதான். கரோனா பாதிப்புக்குப் பிறகு உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. கரோனா நெருக்கடி கற்றுத் தந்த பாடங்கள் குறித்து இப்போது முடிவுக்கு வர முடியாது.

கரோனாவுக்குப் பிறகு உலகம் முன்பு இருந்ததுபோல் இல்லை. அது உற்பத்தியாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி, பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. ஏதோ ஒரு துறை மட்டுமல்ல கிட்டதட்ட எல்லா துறைகளிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே இனி சந்திக்கப்போகும் பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கும்.

இதனால் உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மாறுபட்ட சிந்தனைகளை நோக்கிநகர்த்தப்பட்டுள்ளன. மேலும்இந்த உலகிலுள்ள வளங்களைஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்வதற்கான ஒற்றுமையையும் நாடுகளுக்கிடையே இந்த கரோனா நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக மீண்டுவருகிறது. உலக நாடுகளின் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா விளங்குகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பாக கையாண்ட இந்தியா

கரோனா வைரஸ் தொற்றைஇந்தியா மிகச் சிறப்பாக கையாண்டதோடு தொழிலாளர் சீர்திருத்தங்கள், தனியார்மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது. கரோனா காலத்தில் ஏற்பட்ட ஸ்திரமற்ற சூழலில் ஏற்பட்டதாழ்வு மற்றும் அதனால் ஏற்படும் அதிகபட்ச பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT