உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் | கோப்புப்படம் 
உலகம்

உலக அளவில் கரோனா உயிரிழப்பு குறைந்து வருகிறது: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஏஎன்ஐ

உலக அளவில் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி, உலக அளவில் கரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 21.17 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக அளவில் மக்களுக்குச் செலுத்தப்படுவதன் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ''கரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு இதுவாகும். உலக நாடுகள் அளித்த கணக்கின்படி 50 ஆயிரம், ஆனால், உண்மையில் உயிரிழப்பு அதிகமாகக் கூட இருக்கலாம்.

ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT