அமெரிக்கா, கியூபா இடையே புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள் ளது என்று அதிபர்கள் ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் தெரிவித்தனர்.
கடந்த 1959-ல் கியூபாவில் புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து 1960-ல் அமெரிக்கா, கியூபா இடையிலான தூதரக உறவு முறிந்தது. அரை நூற்றாண் டுக்கும் மேலாக இரு நாடுகளும் மோதல் போக்கை கடைப்பிடித்தன.
முதுமை காரணமாக பிடல் காஸ்ட்ரோ பதவி விலகி அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2006-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு அதிபர் ஒபாமாவின் முயற்சியால் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
கடந்த 2015 ஏப்ரலில் பனாமா வில் நடந்த அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் அதிபர் ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு கடந்த செப்டம்பரில் ஐ.நா.பொதுஅவை மாநாட்டின்போது இருதலைவர் களும் மீண்டும் சந்தித்துப் பேசினர்.
அதைத் தொடர்ந்து அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக கியூபாவுக்கு சென்றார். தலைநகர் ஹவானாவில் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை நேற்றுமுன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கருத்து வேறுபாடுகள்
அதன்பிறகு இருவரும் நிருபர் களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் ஒபாமா கூறிய தாவது:
அரை நூற்றாண்டுக்கு முன்பு ஹவானாவில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இன்று அது சாத்தியமாகி உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பி னும் ஜனநாயகம், மனித உரிமை கள், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந் திரம் ஆகிய விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரே நாள் இரவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. எனவே உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை கியூபா தலைவர்கள் படிப்படியாக பூர்த்தி செய்வார்கள் என்று நம்பு கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மனித உரிமைகள் விவகாரம்
அதிபர் ரவுல் காஸ்ட்ரோ பேசிய தாவது:
அமெரிக்காவுக்கும் கியூபாவுக் கும் இடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவை உட னடியாக மறையும் என்று நம்ப வில்லை. எனினும் இரு நாடுகளுக் கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
கியூபாவில் மனித உரிமைகள் மீறப்படவில்லை. கியூபா சிறையில் அரசியல் கைதிகள் யாரும் அடைக்கப்படவில்லை. உண்மையான அரசியல் கைதிகளின் பெயரை அளித்தால் அவர்களை இன்றே விடுதலை செய்ய உத்தரவிடுவேன்.
கவுதமாலா வளைகுடா பகு தியை அமெரிக்க அரசு மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரவுல் காஸ்ட்ரோ அதிருப்தி
பேட்டியின்போது நிருபர்களின் சிக்கலான கேள்விகளால் அதிருப்தி அடைந்த அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, இத்துடன் பேட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று பாதியிலேயே அறிவித்தார்.
பொதுவாக பேட்டியின் முடிவில் தலைவர்கள் கைகுலுக்கி விடை பெறுவது வழக்கம். அதேபோல இரு தலைவர்களும் கைகுலுக்கி னர். அதன்பின் அதிபர் ஒபாமா, ரவுல் காஸ்ட்ரோவை நட்புடன் ஆரத் தழுவ முயன்றார். அதை விரும்பாத ரவுல், ஒபாமாவின் கையை பிடித்து சட்டென்று மேலே உயர்த்தினார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ரவுல் காஸ்ட்ரோவின் செய்கையை அமெரிக்க மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே அரை நூற்றாண்டு நீடித்த உரசல்கள்
1959 ஜன.1:
கியூபாவில் புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அன்றைய சர்வாதிகாரி பாடிஸ்டா நாட்டைவிட்டு தப்பியோடினார். புதிய அரசை அமெரிக்கா அங்கீகரித்தது. ஆனால் ஆரம்பம் முதலே கசப்புணர்வு ஏற்பட்டது.
1960:
சோவியத் யூனியன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க மறுத்த அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தை அதிபர் பிடல் காஸ்ட்ரோ அரசுடைமையாக்கினார். இதர அமெரிக்க நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.
1960 அக்.:
அமெரிக்கா-கியூபா இடையிலான தூதரக உறவு முறிந்தது.
1961 ஜன.:
காஸ்ட்ரோவை ஆட்சியில் இருந்து அகற்ற பே ஆப் பிக்ஸ் தீவில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். கியூபாவை சோஷலிச நாடாக காஸ்ட்ரோ அறிவித்தார்.
1962 அக்.:
கியூபாவில் அணுஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த சோவியத் யூனியன் திட்டமிட்டது. அங்கு அணுஆயுதங்களை நிறுவினால் போர் மூளும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தனது முடிவை கைவிட்டது. அதேநேரம் கியூபாவை ஆக்கிரமிக்கமாட்டோம் என்று அன்றைய அமெரிக்க அதிபர் கென்னடி ரகசியமாக உறுதிமொழி அளித்தார்.
1977:
அமெரிக்க அதிபராக ஜிம்மி கார்ட்டர் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணிக்க முயன்றார்.
1991:
சோவியத் யூனியன் உடைந்ததால் கியூபாவின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது.
1996:
அகதிகளை மீட்பதற்காக அமெரிக்க தொண்டு நிறுவனம் அனுப்பிய 2 விமானங்களை கியூபா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது.
1998:
ஐந்து கியூபா உளவாளிகளை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். இதற்கு கியூபா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
2006:
அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஆட்சி பொறுப்பேற்றார்.
2014 டிச.17:
அமெரிக்கா, கியூபா இடையே தூதரக உறவு மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிபர் ஒபாமா, ரவுல் காஸ்ட்ரோ அறிவித்தனர். தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை அதிபர் ஒபாமா நீக்கினார்.
2015 ஜூலை 20:
அமெரிக்கா, கியூபா இடையே நல்லுறவை ஏற்படுத்த இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.