உலகம்

பறக்கும் டாக்ஸி: 2025ல் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடும் பிரிட்டன் நிறுவனம்

செய்திப்பிரிவு

அலுவலகத்துக்கு தாமதமாகிவிட்டதே என்று பதற்றத்தில் இருக்கும்போது, நீங்கள் அலுவலகம் செல்ல ஒரு டாக்ஸி புக் செய்து அது பறந்து வந்து உங்களை அலுவலகத்தின் மாடியில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும்?!

இப்படி நாம் கனவில் தான் யோசித்திருப்போம். ஆனால் அதனை நனவாக்கும் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பிரிட்டனின் வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.

வெர்டிகல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் ஃபிட்ஸ்பேட்ரிக் இது குறித்து கூறுகையில், "2025ல் இந்த டாக்ஸி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதற்காக அமெரிக்காவின் பிளான்க் செக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 193 கிமீ தூரம் வரை, சுமார் 4 பேரை ஏற்றிச் செல்லும் இந்த டாக்ஸி திட்டத்தில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஏவவான், ஹனிவெல், ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் எம்12 ஆகியன முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

இந்த ஏர் டாக்ஸிக்கு உரிமம் பெறுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வழி பயண பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அமையும். இந்த ஏர் டாக்ஸிக்கான தொழில்நுட்பங்கள் தான் புதிது.

ஆனால், இயக்குவதற்கான வழிமுறைகள் ஒரு விமான இயக்கத்துக்கு நிகரானது. ஹீத்ரூ விமான நிலையத்துடன் இது தொடர்பாக ஆலோசனையில் உள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT