கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என சர்வதேச நிதியத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். 2021ல் இந்தியா 9.5% வளர்ச்சி காண வாய்ப்புள்ளது என்றும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாளரான கீதா கோபிநாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டுள்ளது. கடந்த ஜூலையில் இந்தியப் பொருளாதாரம் கரோனா இரண்டாவது அலையால் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன் பின்னர் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா காட்டிவரும் திறனால் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி காணும்.
இப்போதைக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐஎம்எஃப் ஏற்கெனவே வெளியிட்ட கணிப்பில் மாற்றம் செய்யத் தேவையில்லை. எங்கள் கணிப்பின் படி 2020ல் 7.3% ஆகக் குறைந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2021ல் 9.5% என்றளவில் இருக்கும், 2022ல் 8.5% என்றிருக்கும்.
சர்வதேசப் பொருளாதாரம் 2021ல் 5.9% என்றும், 2022ல் 8.5% என்றும் இருக்கும். அமெரிக்கப் பொருளாதார வளார்ச்சி இந்த ஆண்டு 6% ஆகவும், அடுத்த நிதியாண்டில் 5.2% ஆகவும் இருக்கும்.
சீனாவில் இந்த ஆண்டு 8% வளர்ச்சியும், 2022ல் 5.6% வளர்ச்சியும் இருக்கும்.
இவ்வாறு கீதா கோபிநாத் கூறினார்.