கரோனா முடிந்துவிட்டதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நாம் முழுமையாக கரோனாவிலிருந்து வெளியே வரவவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மரியா வாவ் கூறும்போது, “ உலக அளவில் கடந்த வாரம் 30 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 54,000 பேர் வரை பலியாகி உள்ளனர். நிலைமை இன்னும் மோசமாகக் கூட மாறலாம். வைரஸ் கட்டுக்குள் இல்லாமல் போகலாம். கரோனா முடிந்துவிட்டதாகப் பலர் நினைக்கிறார்கள்.
நாம் இந்தத் தொற்றின் நடுவில் இருக்கிறோம். முழுமையாக கரோனாவிலிருந்து வெளியே வரவில்லை. இன்னும் பல நகரங்களில் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், மக்கள் கரோனா முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசியைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.