உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 4 லட்சம் உயிர்களைப் பறிக்கும் மலேரியா நோய்க்கு எதிராக முதல் தடுப்பூசியை உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ளது. RTS,S/AS01 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி இனி மலேரியா உயிரிழப்புகளைத் தடுக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேரியா கொசுக்கடியால் ஏற்படும் ஒரு நோய். இந்த நோயால் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் உயிரிழக்க இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க குழந்தைகள் என்பது வேதனைக்குரிய விஷயம்.
2019 ஆண்டு மலேரியா தடுப்பூசி செலுத்தும் பணி பரிசோதனை அடிப்படையில் முன்னோடித் திட்டமாக ஆப்பிரிக்காவின் கானா, கென்யா, மலாவி போன்ற நாடுகளில் அமல்படுத்தப்பட்டது. இது வரை 2 மில்லியன் டோஸ் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசியை ஜிஎஸ்கே மருந்து நிறுவனம் (GSK pharmaceutical company) நிறுவனம் தயாரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் கூறியதாவது:
ஆப்பிரிக்க நாடுகளில் பரிசோதனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளாக மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தத் தடுப்பூசியை உலகம் முழுவதுமே பரவலாகப் பயன்படுத்த உலக சுகாதார மையம் அனுமதிக்கிறது.
சப் சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு 2 வயதுக்குள் 4 தவணைகளாக இந்தத் தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
ஒவ்வொரு இரண்டு நிமிடமும் உலகில் ஒரு குழந்தை மலேரியாவில் உயிரிழக்கும் சூழல் உள்ளது. அதுவும் பெரும்பாலான குழந்தைகள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார மையம் எடுத்த கணக்கின்படி, உலகளவில் அந்த ஆண்டு மலேரியாவில் உயிரிழந்த குழந்தைகளில் கால்வாசி பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மலேரியா ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலியுடன் உடல் வலியும் ஏற்படுகிறது. குளிர் காய்ச்சலாக சில மணி நேரமும் பின்னர் கடுமையான வியர்வை எனவும் மாறி மாறி உபாதைகள் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது.
தடுப்பூசி குறித்து உலக சுகாதார மைய தொற்றுநோய் தடுப்பு, தடுப்பூசி மற்றும் உயிரி ஆராய்ச்சிகள் துறை இயக்குநர் கேட் ஓ பிரெய்ன் கூறும்போது, "இந்தத் தடுப்பூசியை சோதனை முறையில் பயன்படுத்தியதிலேயே தீவிர மலேரியா பாதிப்பை 30% வரை குறைத்துள்ளதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய முடிந்தது. மேலும், இந்தத் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது எளிதானதாக உள்ளது. கொசுவலை போட்டுக் கொண்டு உறங்கமுடியாத அளவுக்கு வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைக் கொண்டு சேர்த்துள்ளோம்" என்று கூறினார்.
உலக சுகாதார மையத்தில் மலேசியா ஒழிப்பு திட்ட இயக்குநர் பெட்ரோ அலன்சோ, எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைக் கொண்டு (mRNA technology) உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி அறிவியல் ரீதியாக மாபெரும் வெற்றி என்று கூறியிருக்கிறார்.