உலகம்

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி; மீட்புப் பணிகள் துரிதம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் இன்று (வியாழன்) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் பலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ரிக்டராக பதிவானதாக மாகாண பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் புள்ளி பலோசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவெட்டா, சிபி, பிஷின், முஸ்லிம் பாக், ஜாய்ரத், கிலா, அப்துல்லா, சஞ்சவி, ஜோப், சமான் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்கள், குழந்தைகள் ஹர்னாய் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் துணை ஆணையர் சோஹைல் அன்வர் ஹாஷ்மி கூறுகையில், ”இதுவரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 6 பேர் குழந்தைகள். முழுமையான சேத விவரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ என்றார்.

பட விளக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

நிலநடுக்கம் குறித்து பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் ஜெனரல் நசீர் அஹமது நசீர் கூறுகையில், "நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப்பாங்கான பகுதி. அதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுளது. ஹர்னாய் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புக் குழுவினர் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் அரசு அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் கைபர் பக்துவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பெஷாவர் வரை இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆனால், இந்த முறை உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படும் வகையில் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அதிகாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன்பின்னர் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்லாமல் சாலைகளிலேயே தஞ்சமடைந்தனர்.

SCROLL FOR NEXT