ஆப்கானிஸ்தானில் இந்தியா கட்டிக் கொடுத்த நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக தலிபான் தீவிர வாதிகளின் தாக்குதல் சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை ஒடுக்கும் விதமாக இந்த தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இரவு ஹெல்மந்த் மாகாணத்தில் இரு போலீஸ் சோதனை சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 போலீஸார் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உடனடியாக பொறுப் பேற்கவில்லை. எனினும் இந்தியா கட்டிக் கொடுத்த நாடாளு மன்ற கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசி நடத்தப் பட்ட தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நேற்று காலை இந்த தாக்குதலை அவர்கள் நடத்தினர். மொத்தம் 4 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்ட தில், ஒரு குண்டு மட்டும் கட்டிடத் தின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் கட்டிடத்துக்குள் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும், ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிட வளாகத்துக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன், ஆப்கானிஸ்தான் சென் றிருந்தபோது இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.