2021ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த சுயுகுரோ மனாபே, ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்குப் புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் போன்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக ஜார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.