ஆப்கானிஸ்தானில் கடந்த 2000ம் ஆண்டுமுதல் 2020ம் ஆண்டுவரை பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியபின் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். கடந்த முறைபோன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் என தலிபான்கள் தரப்பில் அறிவித்தாலும் பெண்களை தொடர்ந்து அடிமைபோன்றே நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை, அமைச்சரவையில் பெண்கள் இல்லை, உயர்கல்விக் கூடங்களில் பெண்களுக்கு தனிவகுப்பறைகள், மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை, பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்றத் தடை என பல கட்டுப்பாடுகளை பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சில மாகாணங்களில் ஆண்கள் தாடி வைக்கவேண்டும், தாடியை ட்ரிம் செய்யவும், மழிக்கவும் கூடாது என முடிதிருத்துவோருக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் இல்லாமல் அமெரிக்க நேட்டோ படைகளின் பாதுகாப்பில் நடந்த 2000 முதல் 2020ம் ஆண்டுவரை பள்ளிகளிலும், உயர்கல்விக் கூடங்களிலும் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.
தலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அப்துல் பாகி ஹக்கானி நேற்று உள்ளூர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் ஆட்சியில் இல்லாதபோது, நேட்டோ, அமெரிக்கப் பாதுகாப்பின் கீழ் ஆட்சி செய்த ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் ஆட்சியில் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்படித்துப் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
இந்த தேசத்துக்கு பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை, தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். இளம் தலைமுறையினரின் அறிவை ஆப்கனின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
இன்றுள்ள முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்பு குறைவானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆப்கானிஸ்தான் வரலாற்றில் கல்விக்கான பொற்காலமாகக் கருதப்படுவது கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.