உலகம்

இத்தாலியில் ஆள் இல்லாத கட்டிடத்தில் மோதி நொறுங்கிய விமானம்: குடும்பத்துடன் உயிரிழந்த ருமேனியா பெரும் பணக்காரர்

செய்திப்பிரிவு

இத்தாலியில் ஆள் இல்லாத கட்டிடத்தின் மீது மோதி விமானம் ஒன்று நொறுங்கிவிழுந்தது. இந்த விபத்தில் ருமேனியா நாட்டின் பெரும் பணக்காரர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ளது மிலன் நகர். இந்தப் பகுதியில் ஆள் இல்லாத கட்டிடம் ஒன்று உள்ளது.

இந்நிலையில் மிலன் நகரில் லினேட் எனுமிடத்திலிருந்து தனிநபர் விமானம் ஒன்று புறப்பட்டது. சார்டினியா தீவுக்குச் செல்ல பயணத்தைத் தொடங்கிய அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆளில்லாத அந்தக் கட்டிடத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில், அந்த விமானத்தை ருமேனியாவின் பெரும் பணக்காரரரான டான் பெட்ரெஸ்கூ ஓட்டிவந்தார். இவர் ருமேனியாவின் கட்டுமானத் தொழிலின் ஜாம்பவான். அதுமட்டுமல்லாமல் இவருக்கு சொந்தமாக பெரிய ஹைபர் மார்க்கெட்டுகள், மால்கள் இருக்கின்றன.

இந்நிலையில் இந்த விபத்தில் பெட்ரெஸ்கூவின் மனைவி (65), அவர்களது மகன் டான் ஸ்டெஃபானோ (30) ஆகியோரும் இறந்தனர்.

இரண்டு அடுக்குமாடி கட்டிடம் மீது விமானம் மோதியபோது அக்கம்பக்கத்திலிருந்தோர் ஏதோ குண்டு வெடித்துவிட்டது என்றே நினைத்துள்ளனர்.
விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என இத்தாலி நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT