இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் குக்கரைத் திருமணம் செய்து, பின்னர் அதனை விவாகரத்து செய்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
மரங்கள், விலங்குகளைத் திருமணம் செய்துகொண்ட நபர்களைப் பார்த்திருக்கிறோம். ஏன் சமீபத்தில் பிரேசில் மாடல் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இந்தோனேசியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குக்கரைத் திருமணம் செய்து, தற்போது விவாகரத்து செய்துள்ளார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த கொய்ருல் அனம் என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன்னர் குக்கரைத் திருமணம் செய்த புகைப்படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்தோனேசிய முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது. குக்கரும், இளைஞரும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
திருமணம் குறித்து கொய்ருல் அனம் கூறும்போது, “எனது மனைவி அழகாக இருக்கிறார். அதிகம் பேச மாட்டார். நன்றாகச் சமைப்பார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தனக்கான இணை யாரும் இல்லை என்று கூறி, குக்கரை விவாகரத்து செய்துள்ளதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.