மலேசியாவில் விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளதால், ஆசிரியர்கள் விரைவாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “மலேசியாவில் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதன் காரணமாக ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தீவிர நடவடிக்கைகளை மலேசிய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பணி நீக்கமும் செய்யப்படலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
மலேசியாவில் இதுவரை 22 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கரோனா தடுப்பூசி செலுத்துவதையே பிராதான நடவடிக்கையாக உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி வருகின்றன. உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.