உலகம்

நேட்டோவுக்கு எதிராக எல்லையில் ரஷ்யா படைக் குவிப்பு

செய்திப்பிரிவு

உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா இணைத்துக்கொண்டதை தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவான மேற்கத்திய (நேட்டோ) நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் மேற்கு எல்லையை ஒட்டியுள்ள பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியாவில், நேட்டோ படைகள் திங்கள்கிழமை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. லாட்வியா தலைநகர் ரிகா அருகில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 10 நாடுகளின் 4,700 வீரர்கள் திங்கள்கிழமை இப் பயிற்சியில் ஈடுபட்டனர். 800 ராணுவ வாகனங்களும் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் போர்ப் பயிற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா தனது மேற்கு எல்லையை நோக்கி செவ்வாய்க்கிழமை படைகளை அனுப்பத் தொடங்கியது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், “பால்டிக் கடற்படை, விமானப் படை மற்றும் தரைப்படை வீரர்கள், கலினிங்ராட் பகுதியை நோக்கி விரைந்து வருகின்றனர். லாட்வியாவில் உள்ள நேட்டோ படைகளுக்கு இணையான வலிமை கொண்டதாக இப்படை இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT