ஆஸ்திரேலியாவில் இரண்டு மாத ஊரடங்குக்குப் பின்னரும் கரோனா கட்டுக்குள் வரவில்லை.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களாக ஊரடங்கு நீடிக்கிறது. எனினும் அங்கு கரோனா தொற்று குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மெல்போர்ன் நகரில் புதன்கிழமை 900 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸ் காரணமாகவே மெல்போர்ன், விக்டோரியா போன்ற பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.
விக்டோரியா மாகாண நிர்வாக இயக்குநர் டேனியல் கூறும்போது, “இவை தவிர்க்க முடியாத ஒன்று. நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை. எனினும் பலர் விதிமுறைகளை மீறுகிறார்கள்” என்றார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,290 பேர் பலியாகி உள்ளனர்.
சமூக இடைவெளியும், தடுப்பூசியுமே கரோனா பரவலைத் தடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.