ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு, ஏஞ்சலா மெர்க்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு திங்கட்கிழமை அதன் முடிவுகள் வெளியாகின. சமூக ஜனநாயகக் கட்சி 25.7% வாக்குகளைப் பெற்றது. ஏஞ்சலா மெர்க்கல் தலைவராக உள்ள ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி 24.1% வாக்குகளைப் பெற்றது. கிரீன்ஸ் கட்சி 14.8% வாக்குகளைப் பெற்றுள்ளது. சுதந்திர ஜனநாயகக் கட்சி 11.5% வாக்குகளைப் பெற்றது.
தற்போதையை நிலவரப்படி பெரும்பான்மை இல்லை என்றாலும், ஜனநாயகக் கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஷோல்ஸுக்கு, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஞ்சலா மெர்க்கல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ” ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு ஒலாஃப் ஷோல்ஸுக்கு ஏஞ்சலா மெர்க்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை மெர்க்கல் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 16 வருடங்களாக ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்தக் கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்க்கல் தொடர்ந்து ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தார். இதன் மூலம் உலக நாடுகளிடையே செல்வாக்குமிக்க தலைவராகவும் அவர் அறியப்பட்டார்.