உலகம்

மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார் முஷாரப்

பிடிஐ

வெளிநாடு செல்ல அரசு அனுமதி கிடைத்த சில மணி நேரத்தில், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ் தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் துபாய் சென்றார்.

பாகிஸ்தானில் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் பெர்வேஸ் முஷாரப் (72). அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை பதவியில் இருந்து நீக்கினார். அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஷெரீப் பிரதமரானார். இதற்கிடையில் முன்னாள் பிரதமர் பெனசிர் கொலை வழக்கு, தேச துரோக வழக்கு என பல வழக்குகள் முஷாரப் மீது பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து முஷாரப் வெளிநாடு செல்லவும் அரசு தடை விதித்தது.

ஆனால், அந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று சிந்து மாகாண உயர் நீதிமன்றம் அறிவித் தது. இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதி மன்றம், சிந்து உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. மேலும் அரசு மேல்முறையீட்டு மனுவையும் நிராகரித்தது. இதையடுத்து வெளி நாடு செல்ல முஷாரப்புக்கு அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அரசு அனுமதி கிடைத்த சில மணி நேரங்களில் கராச்சியில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 3.55 மணிக்கு முஷாரப் துபாய் புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மருத்துவ சிகிச்சைக்காக முஷாரப் வெளிநாடு செல்ல அரசு அனுமதித்துள்ளது. மேலும், 6 வாரங்களுக்குள் அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்பி வருவதாக உறுதி அளித்துள்ளார். அவர் மீதான வழக்குகள் தொடர்ந்து நடக்கும்’’ என்றார்.

முஷாரப்பின் அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘முஷாரப்பின் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை பெறவே துபாய் சென்றுள்ளார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT