30 ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் பலன் என்னவென்று கிரெட்டா துன்பர்க் உலகத் தலைவர்களை விளாசியிருக்கிறார்.
இத்தாலியின் மிலன் நகரில் யூத் ஃபார் க்ளைமேட் (Youth4Climate) காலநிலை மாற்றத்துக்கான இளைஞர்கள் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
இதில் உலகம் முழுவதுமிருந்து 190 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கிரெட்டா துன்பர்கும் கலந்து கொண்டார். ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்ற 16 வயது சிறுமி காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனி நபராகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த மாநாட்டில் பேசிய கிரெட்டா, உலகம் முழுவதுமிருந்து என்னைப் போன்ற இளைஞர்களை உலகத் தலைவர்கள் தேர்வு செய்து அழைத்துவந்து இதுபோன்ற மாநாட்டை நடத்துகின்றனர். ஆனால், இதில் நாங்கள் பேசுவதை அவர்கள் செவி கொடுத்து கேட்கிறார்களா? என்றால் இல்லை. எங்கள் குரல்களுக்கு செவிசாய்ப்பது போல் நடிக்கிறார்கள்.
இங்கே ஒரே ஒரு பூமிதான் இருக்கிறது. பிளானட் பி எல்லாம் இங்கே இல்லை. இதைத் தான் நாம் சரி செய்து கொள்ள வேண்டும். ஆனால், இப்போது இருப்பதுபோல் பேசிவிட்டு மட்டுமே இருந்தால் எதுவும் நடக்காது. 30 ஆண்டுகளாக உலகத் தலைவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பலன் என்ன?. அவர்களின் பேச்சுகள் நம்பிக்கை அளிக்கின்றன. ஆனால், வெறும் நம்பிக்கை மட்டுமே போதாதே. அவர்களின் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாக்குறுதிகளாக இருக்கின்றன என்றார்.
இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவாஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்கார் சோரியா கூறுகையில், பணம் தான் எல்லாம். பணக்கார நாடுகள் 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 500 பில்லியன் டாலரை காலநிலை மாற்ற பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக செலவழிக்க வேண்டும். இல்லாவிட்டால், இது போன்ற மாநாடுகளை நடத்தி நேரத்தை விரயமாக்க வேண்டாம் என்றார்.
உகாண்டாவைச் சேர்ந்த வெனேசா நகாட்டா கூறுகையில், பெரும் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் ஒதுக்கி எந்தெந்த நாடுகள் காலநிலை மாற்றத்துக்கு அதிகக் காரணமாக இருக்கின்றனவோ அவற்றில் எல்லாம் பழமையான எரிபொருள் பயன்பாட்டில் இருந்து சுத்தமான எரிபொருள் பயன்பாட்டை 2020க்குள் கொண்டு வருவோம் என உறுதியளித்தது. 2020 முடிந்துவிட்டது. ஆனால் நாங்கள் இன்னமும் காத்திருக்கிறோம் என்று கூறினார்.