உலகம்

இந்திய வீராங்கனை இனாயத் கானின் நூற்றாண்டு விழா

செய்திப்பிரிவு

இரண்டாம் உலகப்போரின்போது, பிரிட்டனின் சார்பில் உளவுப் பணியில் ஈடுபட்ட இந்திய வீராங்கனை நூர் இனாயத் கானின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா லண்டனில் கொண்டாடப்பட்டது.

நூரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு நூர் இனாயத் கான் நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாவில் நாவலாசிரியரும், அரசியல் விமர்சகருமான பிரடெரிக் போர்சித் கூறுகையில், “சிறப்பு உளவுப் பிரிவில் பலரும் பணியாற்ற தயங்கி வந்த நிலையில், துணிச்சலுடன் அப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர் நூர் இனாயத் கான். அவர், மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் வம்சாவளியைச் சேர்ந்தவர். எதற்கும் அஞ்சாத தன்மை, நூரின் மரபணுவிலேயே இருந்துள்ளது” என்று பாராட்டினார்.

துணிச்சலாக செயல்பட்ட நூர்

1914-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி நூர் பிறந்தார். அவரின் தந்தை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் ஆவார். தாயார் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டன் ராணுவத்தில் ரேடியோ ஆபரேட்டராக நூர் சேர்ந்தார். போர் முனையில் வயர்லெஸ் ரேடியோ மூலம் தகவல்களை பெற்று அனுப்பும் பணியை முதன் முதலாக மேற்கொண்ட பெண் என்ற பெருமையை நூர் பெற்றிருந்தார். பிரான்ஸை ஜெர்மனியின் நாஜி படைகள் ஆக்கிரமித்திருந்த நிலையில், அங்கு உளவுப் பணியை மேற்கொள்ள நூர் அனுப்பிவைக்கப்பட்டார்.

1943-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி மேடலின் என்ற புனைபெயரில் பிரான்ஸின் வட பகுதியில் தனது பணியை நூர் மேற்கொண்டிருந்தார். முக்கிய தகவல்களை பிரிட்டன் ராணுவத்துக்கு அனுப்பி வந்தார்.

இந்நிலையில் அவரை நாஜி படையினர் கைது செய்து டச்சாவ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை கடுமையாக துன்புறுத்தி தகவல்களை சேகரிக்க நாஜி படையினர் முயன்றனர். எந்தவிதமான தகவல்களையும் சொல்ல மறுத்த நூரை 1944-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி நாஜி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அப்போது அவருக்கு வயது 30. லண்டனின் கார்டான் சதுக்கத்தில் நூர் இனாயத் கானின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT