உலகம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாதிகள் அட்டூழியம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலிஜின்னாவின் சிலை தீவிரவாதி களால் குண்டுவைத்து தகர்க்கப் பட்டது.

பலுசிஸ்தானின் துறைமுக நகரான குவாதரில் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது அலி ஜின்னாவின் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் சிலைக்கு அடியில் குண்டு வெடித்ததில் சிலை வெடித்து சிதறியது.

இதற்கு தடை செய்யப்பட்டபலுசிஸ்தான் தீவிரவாத அமைப்பான பலோச் குடியரசுப்படை பொறுப்பேற்றுள்ளது.

இதுகுறித்து குவாதர் துணை ஆணையரான ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அப்துல் கபீர் கான் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை போல அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ஜின்னாவின் சிலையை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தை அனைத்துகோணங்களிலும் விசாரிக்க விரும்புகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படு வார்கள்” என்றார்.

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தான் சித்தாந்தத்தின் மீதான தாக்குதல் என எம்.பி.யும் முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்ப் ராஸ் பக்டி கூறியுள்ளார்.

தீயில் சேதமடைந்த வீடு

பலுசிஸ்தானின் ஜியாரத் நகரில் ஜின்னா தனது இறுதிக் காலத்தை கழித்த வீடு தேசியநினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 2013-ல் நடந்த குண்டுவெடிப்பில், அந்த வீடு தீயில் கடும் சேதம் அடைந்தது.

இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டது போலதற்போதும் தண்டிக்கப்பட வேண்டும் என சர்ப்ராஸ் பக்டி வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT