கடத்தல் வழக்கில் கைதானவர்களைக் கொலை செய்து பொது இடங்களில் தொங்கவிட்ட தலிபான்களின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டோலோ நியூஸ் வெளியிட்ட செய்தியில், “ ஆப்கானில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தலிபான்கள், இனியும் யாரும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதை அறிவிக்கும் வகையில் இறந்த நால்வரின் உடல்களை ஹெராத்தில் உள்ள பரபரப்பான வீதிகளில் தொடங்கவிட்டனர். மேலும் சில முக்கிய நகரங்களிலும் அந்த உடல்கள் பொதுமக்கள் காணும்படி தொடங்கவிடப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹெராத் ஆளுநர் முகாஜிர் கூறும்போது, “ நாங்கள் இஸ்லாமிக் எமிரேட். யாரும் எங்கள் மக்களை துன்பப்படுத்தக் கூடாது. யாரும் கடத்தப்படக்கூடாது” என்றார்.
கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் (கை, கால் துண்டிப்பு போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும்: தலிபான் தலைவர் திட்டவட்டம்) என தலிபான் தலைவர் முல்லா நூருதீன் துராபி ஏற்கெனவே தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை தலிபான்கள் கட்டவிழ்த்துள்ளன.
மேலும், கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் எனவும் தலிபான்கள் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்திருக்கிறார்.