அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெச்1பி விசா விவகாரம் குறித்து அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் பணியாற்றும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும், சமூகப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்குவகிக்கின்றனர். சுமார் 2 லட்சம்இந்திய மாணவர்கள் அமெரிக்கபொருளாதாரத்தில் ஆண்டுக்கு 7.7 பில்லியன் டாலர் அளவுக்குபங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் பணியாளர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்த ஹெச்-1பிவிசா முறையையே நம்பியிருக்கிறார்கள். இந்த விசா முறைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பெரும் பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று பைடனிடம் மோடி தெரிவித்தார். இதைக் கேட்டுக்கொண்ட பைடன்தரப்பு இந்த விவகாரம் குறித்து பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
80 லட்சம் தடுப்பூசி ஏற்றுமதி
ஆசிய நாடுகள் முழுவதற்கும் 100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசியை 2022 இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள குவாட் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் கரோனா 2-ம் அலை கடந்த ஏப்ரல் மாதம்உச்சத்தை எட்டியதால் தடுப்பூசிஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு குறைந்ததுடன் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என மோடி கூறியுள்ளார். அதன்படி அக்டோபர் இறுதியில் 80 லட்சம் டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.